
சாஸ்திரங்களின் சொல்வண்ணம் என்பது அடர்ந்த காட்டைப் போன்றது. மனம் சில வேளைகளில் அதில் சிக்குண்டு வெளிவர வழிதெரியாமல் தடுமாறுகின்றது. 'சப்த ஜாலம் மஹாரண்யம் - சித்த ப்ரமண காரணம்' - வார்த்தை ஜாலமாகிய வலை ஓர் அடர்ந்த காடாகும். மனம் அலைந்து உழல்வதற்குக் காரணமாக இருப்பது அது. (விவேக சூடாமணி). பல்வேறு வகைகளில் சொற்களை அடுக்கியமைப்பது, மனத்தைக் கவரவல்ல அழகிய மொழியில் பேசுவது, சாஸ்திரக் கருத்துக்களுக்குப் பல்வேறு கோணங்களில் விதவிதமாகப் பொருள் காண்பது - இவையெல்லாம் பண்டிதர்களுக்குத் தங்கள் பெருமையையும் வாதத்திறமையையும் பறைசாற்றப் பயன்படலாமே தவிர, ஆன்மீக வளர்ச்சிக்குச் சிறிதும் பயன்படாது.
இது பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் வேடிக்கையாக ஒரு கதை சொல்வது வழக்கம். 'சிலர் ஒரு மாந்தோப்பிற்கு சென்றனர். சென்று அங்குள்ள மரங்களின் இலைகள், தளிர்கள், கிளைகள் எல்லாவற்றையும் மும்முரமாக எண்ண ஆரம்பித்தனர். இலைகளின் நிறத்தை ஆராய்ந்தனர். அக்கறையோடு குறிப்புகள் எடுத்தனர். பின்னர் இவற்றைப் பல தலைப்புகளில் விவாதித்தனர். இப்படி ஆராய்வது அவர்களது அறிவிற்கு விருந்தாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவர்களுள் பிறரை விட அதிக விவேகமுள்ள ஒருவன் இவைகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் மாம்பழத்தைப் பறித்து உண்டு மகிழ்ந்தான். அவனல்லவா புத்திசாலி? அவனைப்போல் நீங்களும் இலை, தளிர், கிளை இவற்றை எண்ணுவது, குறிப்பெடுப்பது என்பதை பிறருக்கு விட்டுவிடுங்கள். இந்த வேலைக்கென்று தனித்துறை உள்ளது. ஆன்மீக உலகில் இவற்றுக்கு இடமில்லை.மனிதன் மிகவுயர்ந்த லட்சியமும் அவனது மகிமைகளுள் தலைசிறந்ததும் ஆன்மீகமே. ஆனால் அதற்கு இவ்வளவு பாடுபடவேண்டியதில்லை. நீ ஒரு பக்தனாக இருக்க விரும்பினால், கிருஷ்ணன் மதுராவில் பிறந்தாரா, ப்ருந்தவனத்தில் பிறந்தாரா, அவர் என்ன செய்து கொண்டிருந்தார், அவர் கீதையை உபதேசித்த சரியான காலம் எது, என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவையில்லை. உனக்கு வேண்டியதெல்லாம், கடமையைப்பற்றியும், பக்தியைப் பற்றியும் கீதை கூறுகின்ற அற்புதமான உபதேசங்களைப் பேரார்வத்துடன் பின்பற்றுவதுதான். கீதையைப் பற்றிய பிற செய்திகளும், அதை வழங்கியவரைப் பற்றிய ஆராய்ச்சிகளும் பண்டிதர்களின் பொழுது போக்கிற்கு உரியவை. அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் செய்து கொள்ளட்டும். அவர்களுடைய அறிவாற்றல் மிக்க வாதப் பிரதிவாதங்களுக்கு 'சாந்தி: சாந்தி' என்று சொல்லிவிட்டு நாம் மாம்பழத்தை சுவைத்து மகிழ்வோம்'.- சுவாமி விவேகானந்தரின் 'பக்தி யோகம்'
விசாராப்பார்வை :கணினி மூலம் ஆகும் மின்சார செலவை குறைக்க உதவும் எடிசன் இங்கே சென்று இறக்கி கொள்ளவும் .