பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் .


விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.
ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.
சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு.
‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்ட மகா புருஷர் அல்லவா அவர்.


இது மட்டுமல்ல மேலும் பல இந்து மதத்தின் அற்புதமான விஷயங்களை படிக்க இங்கே செல்லுங்கள்
blog comments powered by Disqus