உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம். சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை. ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.
அதிர்ச்சியைக் குறைக்க...
மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:
ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.
ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.
டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.
குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.
மேலும் தெரிந்துகொள்ள பூவுலகின் நண்பர்களிடம் செல்லுங்கள் .