தர்மபுரியில் ராமநாதன், கண்ணன் என்ற இரு சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ராமநாதன் மகா பண்டிதன்! தினமும் வீட்டில் தேவி உபாசனையும் செய்து வந்தான். பூஜை, புனஸ்காரங்களைத் தவிர ஆயுர்வேத வைத்தியத்திலும் சிறந்தவன். ஆனால் தன் வீடு தேடி வரும் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பான்.
அவனுடைய தம்பி கண்ணனும் வேதங்கள் பயின்றவன் ஆயினும், அண்ணனைப் போல் பண்டிதன் இல்லை. மனத்தால் அம்பாளை நினைத்து உருகுபவன்! அவனும் அண்ணனைப் போல் ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கினான். ஆனால் அண்ணனைப் போல் இல்லாமல், யார் எந்த நேரத்தில் சிகிச்சைக்காக அழைத்தாலும், நோயாளிகளை கவனிக்க நேரே சென்று விடுவான்.
ஒருநாள் நடு இரவில் பக்கத்து கிராமத்திலிருந்து இருவர் கண்ணனைத் தேடி வந்தனர். அவர்களுடைய உறவினருடைய மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எந்த சமயமும் இறக்கக்கூடும் என்றும் கூறி, அவனை உடனே வருமாறு அழைத்தனர். உடனே, கண்ணன் மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
பக்கத்து கிராமத்தை அடைந்து, நோயாளிக் குழந்தையின் வீட்டை நெருங்கிய போது, அந்தச் சிறுவனின் தாய் ஓலமிட்டு கதறிக் கொண்டு இருந்தாள். அவளை சமாதானப் படுத்திய கண்ணன், சிறுவனின் நாடி பிடித்துப் பார்த்து சோதித்தபின், தன் மருந்துப் பெட்டியிலிருந்து சில சூர்ணங்களை எடுத்துத் தேனில் குழைத்து சிறுவனுக்கு அளித்தான்.
ஒரு மணி நேரங்கழித்து சிறுவன் கண் விழித்தான். சிறிது நேரத்தில் சிறுவன் எழுந்து உட்கார்ந்து விளையாடவே ஆரம்பித்து விட்டது. சிறுவனின் தாய் அவனைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர்விட, சுற்றி இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அனைவரும் கண்ணனை பாராட்டினர். காலையிலிருந்து மும்முரமாக சிகிச்சை அளித்த கண்ணனுக்கு நண்பகல் வந்ததே தெரியவில்லை. பசி அவன் வயிற்றைக்கிள்ள, அவர்களிடம் சாப்பிட ஏதாவது தரும்படிக் கேட்டான்.
சிறுவனின் பெற்றோர் சிறிது நேரம் தயங்கிய பிறகு, "நீங்கள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்! எங்கள் வீட்டிலே சாப்பிடுவீர்களா?" என்று தயக்கத்துடன் கேட்டனர்.
"ஓ! தாராளமாக சாப்பிடுவேன்!" என்று கூறிய கண்ணன், அவர்களோடு ஒன்றாக அமர்ந்து அவர்கள் அன்புடன் அளித்த உணவை சாப்பிட்டான். பிறகு அவர்களிடம் விடைபெற்று தன் கிராமத்தை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்ததும், ராமநாதன் அவனை உணவு உண்ண அழைத்த போது, தான் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதைக் கண்ணன் அறிவித்தான். உடனே, ராமநாதனுக்குக் கடும் கோபம் உண்டாகியது.
"நாம் நம் வீட்டைத் தவிர வேறு எங்கும் சாப்பிடக்கூடாது என்று தெரியாதா உனக்கு?" என்று கூச்சலிட்டான்.
"அண்ணா? காலையிலிருந்து சாப்பிடாததால் எனக்கு பயங்கரப் பசியாயிருந்தது. அதனால் அங்கே சாப்பிட்டு விட்டேன். தவிர சூரிய ஒளி, காற்று, தண்ணீர் ஆகியவை வகுப்பு வேறுபாடு பார்க்கின்றனவா? நமது உயிர் காத்து உடல் வளர்க்கும் உணவும் அதுபோல் தான்! அதை யார் அளித்தாலும் உண்ணலாம்! தவறில்லை!" என்று கண்ணன் கூறவும், ராமநாதனின் கோபத்தீயில் எண்ணெய் விட்டது போல் ஆயிற்று. "நீ ஒரு மகாபாவி! இன்றுமுதல் நீ எனக்குத் தம்பியில்லை! போ, வீட்டை விட்டு!" என்று ராமநாதன் காட்டுக்கத்தலாகக் கத்த, கண்ணன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணன் வீட்டை விட்டு வெளி ஏறினான்.
அண்ணனின் வீட்டிற்கு அருகிலேயே மற்றொரு வீட்டைக் கட்டிக் கொண்டு கண்ணன் வசித்துவரத் தொடங்கினான். ஆனால் அவன் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. சாதி, மத பேதம் பார்க்காமல் வீடு தேடி வருபவர்கள் அனைவருக்கும் உணவு அளித்தான்.
திடீரென, தர்மபுரியில் மழை பெய்யத் தொடங்க, தொடர்ந்து பல நாள்கள் மழை நீடித்தது. பல ஏழைகளின் குடிசைகள் சேதமாயின. வீட்டை இழந்த ஏழைகள் அனைவரும் கண்ணன் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கையில், திடீரென ராமநாதன் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. ராமநாதனும், அவன் மனைவியும் பூஜை செய்து கொண்டு இருந்த அறை மட்டும் தப்பியது. ஆனால், கண்ணன் வீட்டிற்கு எந்த சேதமும் உண்டாகவில்லை.
அதைக்கண்டு கோபமுற்ற ராமநாதன் தான் வழிபடும் தேவியிடம், "தேவி! உனக்கு தினமும் மணிக்கணக்காக பூஜை செய்கிறேன். அப்படிப்பட்ட என் வீட்டை இடித்து விட்டாய்! ஆனால், ஒருபோதும் பூஜை செய்யாதவனான கண்ணனின் வீடு சேதமடையவில்லை. இது ஏன்?" என்று முறையிட்டான்.
உடனே, அவன் பூஜை செய்யும் தேவி பேசத் தொடங்கினாள். "நீ என்னுடைய பக்தன் தான்! ஆனால் ஆசார, அனுஷ்டானங்கள் என்ற பெயரில் ஏழை மக்களை ஒதுக்கி வைத்தாய்! உன் தம்பி என்னை பூஜை செய்வதில்லையே தவிர, என்னை மனத்தால் வழிபடுகிறான். நீ என்னை இந்த விக்கிரகத்தில் மட்டும் காண்கிறாய். அவனோ ஒவ்வொரு உயிரிலும் காண்கிறான். தவிர, அவன் வீட்டில் இப்போது நூற்றுக்கணக்கான ஏழைகள் தங்கி உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டி, அந்த வீட்டை இடியாமல் காப்பாற்றினேன். உன் வீடு இடிந்ததே தவிர, உன்னையும், உன் மனைவியையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றாள்.
தேவியின் சொற்களைக் கேட்ட ராமநாதனின் மனம் மாறியது. "தேவி! இன்று நான் உண்மையை உணர்ந்தேன். இனி, என் தம்பியைப் போல் நானும் சேவை செய்வேன்!" என்று கூறி தேவியை வணங்கினான்
இது மட்டுமல்ல இதைபோல் பல அழகான கதைகளை படிக்க
இங்கே
blog comments powered by Disqus