தோல்வியும் வெற்றியும் .


ஒவ்வொருவரும் வெற்றியடையவே ஆசைப்படுகிறோம், பாடுபடுகிறோம் என்றாலும் வெற்றியை நோக்கிய பாதையில் தோல்விகள் என்ற மைல்கல்களை நாம் கடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கனியை சுவைக்கையில் அதன் ருசி கூடுவதும் நாம் சந்தித்த தோல்விகளின் அனுபவங்களாலேயே. ஆனாலும் தோல்வி வரும் போது அது சகிக்க முடியாததாகவே இருக்கிறது. சகிக்க முடியா விட்டாலும் தவிர்க்க முடியாத போது தோல்விகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியை விடச் சிறந்த முறையில் யாரும் பாடங்களைக் கற்றுத் தர முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் வெற்றி பெரிதாக எதையும் புதிதாகக் கற்றுத் தருவதில்லை. மாறாக தோல்வி நிறையவே கற்றுத் தருகிறது. நிறைய சிந்திக்க வைக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிந்திப்பதற்கு பதிலாக, கற்றுக் கொள்வதற்குப் பதிலாக நாம் வருத்தப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம். தோல்வி நம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு பதிலாக நாம் யாரையாவது குறை சொல்ல முற்படுகிறோம். தோல்வி நம் பலவீனங்களை நமக்கு உணர்த்த முனைகிறது. நாம் அதை உணர்வதற்குத் தயாராவதற்குப் பதிலாக நம் தோல்வி எப்படி நியாயமற்றது என்று மற்றவர்க்கு விளக்க முனைகிறோம். எனவே தான் தோல்விகள் வந்து போனாலும் நாம் அதன் மூலம் உண்மையான பயனடைவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வி நமக்கு பணிவைக் கற்றுத் தருகிறது. மாறாக வெற்றி பெரும்பாலும் அகம்பாவத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெற்றி சில சமயங்களில் பல காரணங்களால் தவறுதலாகக் கூடக் கிடைத்து விடுவதுண்டு. அப்போது இல்லாத உயர்வுகள் இருப்பதாக எண்ணி அடுத்த வீழ்ச்சிக்குத் தேவையான கர்வத்தை நாம் பெற்று விடுவதும் உண்டு. தோல்விகள் பல கிடைத்து பணிவைக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றி கிடைக்கும் போதும் நிலை மீறி நடப்பதில்லை.


இன்னும் இன்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் ,நற்சிந்தனை செய்திகள் படிக்க மிக அருமையான தளம் இது .
blog comments powered by Disqus